கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் அந்தப் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் பரவிய நிலையில் பெற்றோரும் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறை மேற்கொண்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.