சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒருவர் இந்த மிரட்டலை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமைச் செயலகக் கட்டடத்திலும் டிஜிபி அலுவலகக் கட்டடத்திலும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும் நேரில் சென்று தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவலகம் ஆகியவற்றில் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 5) தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும், தலைமைச் செயலகத்துக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் 2024 ஏப்ரல் மாதத்திலும் தலைமைச் செயலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். அவர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறை அதிகாரிகள் அவரைக் கண்டு பிடித்தனர். அவர் கடலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், இந்த முறை மிரட்டல் விடுத்தவர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறை அவரை வலை வீசித் தேடி வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறை விழிப்பு நிலையில் உள்ளது.
சனிக்கிழமை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதுதொடர்பிலும் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்தவரை காவல்துறை தேடி வருகிறது.
அதேபோல், 2024 டிசம்பர் 29ஆம் தேதி, காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட மர்ம மனிதர், வடபழனி முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

