கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை

2 mins read
51d95cfa-29dd-48ff-96dd-8da1ab7dc06f
மறைந்த தமிழ்ப் படைப்பாளர்கள் ஐவரின் படைப்புகளை நாட்டுடமையாக்கி அவற்றுக்கான உரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: இந்துத் தமிழ் திசை

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதிவரை தமிழ்மொழி வார விழா கொண்டாடப்பட்டது.

அதன் நிறைவு விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் திங்கட்கிழமை (மே 5) நடைபெற்றது.

அந்த விழாவில் மறைந்த எழுத்தாளர்கள் புலவர் இலமா. தமிழ்நாவன், கொ.மா.கோதண்டம், ஆ. பழநி, மெர்வின், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகிய ஐந்து படைப்பாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்கான நூல் உரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சம் காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும் தமிழ் மொழி வாரத்தை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன், தமது இளம் வயதிலிருந்தே தமிழ்மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். மகாகவி பாரதியார் புதுவையில் தங்கியிருந்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பாரதியாரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, பாரதிதாசன் எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன், தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர். பாவேந்தர் பாரதிதாசன் 86க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக 1970-ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி விருது’, வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, முத்தமிழறிஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டன.

மேலும், தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூலுரிமைத் தொகையாக ரூ. 3 கோடியே 79 லட்சத்திற்கான காசோலைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்