சென்னை: தமிழ் உலகில் மிகவும் பிரபலமான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
நூற்றுக்கணக்கான பதிப்பகங்களின் தமிழின் பல்வேறு துறை சார்ந்த நூல்களை ஒரே இடத்தில் வாங்கவும் தமிழின் முக்கியப் படைப்பாளர்களை சந்திக்கவும் அரிய வாய்ப்பாக அமையும் புத்தகத் திருவிழா, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்து வருகிறது.
49வது ஆண்டாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் புத்தகக் கண்காட்சியில், இந்த ஆண்டு சாதனை அளவாகக் கிட்டத்தட்ட 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழக, இந்தியப் பதிப்பாளர்கள், இலக்கியத்துறை சார்ந்த அமைப்புகளுடன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தமிழ்நூல் பதிப்பகங்கள், பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்ற அனைத்துலக நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.
இந்த ஆண்டு முதன்முறையாகக் குழந்தைகளுக்காகத் தனி பூங்கா, திருநங்கைகளால் நடத்தப்படும் ‘Queer’ பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புத்தகக் கண்காட்சிக்குக் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
கவிஞர் சுகுமாரன், பாரதிபுத்திரன் உட்பட அறுவருக்கு கலைஞர் பொற்கிழி விருது
சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு, இந்த ஆண்டு அறுவருக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் சிறந்து விளங்கும் படைப்பாளருக்கு தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம் (பபாசி -BAPASI) சார்பில் ஆண்டுதோறும் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
கவிதைப் பிரிவில் மூத்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் கட்டுரையாசிரிருமான சுகுமாரனுக்கு விருது வழங்கப்படுகிறது.
சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யாவுக்கும் நாவலுக்காக இரா.முருகனுக்கும் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உரைநடைப் பிரிவில் பேராசிரியர் பாரதி புத்திரன் என்கிற பாலுசாமி, நாடகத் துறையில் சிறந்த செயல்பாட்டுக்காகக் கலைஞர் கருணா பிரசாத், மொழிபெயர்ப்புக்காக வ. கீதா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுபெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

