சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) திறந்து வைத்தார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்தப் புத்தகப் பூங்காவில் பத்தாயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தகப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்பூங்காக்கள் அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கேற்ப, சென்னையில் உள்ள சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் புத்தகப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வசதியுடன் கூடிய இந்தப் பூங்காவை முதல்வர் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.29.80 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.