மதுரை: தமிழகப் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் முறைகேடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மூவர், உரிய ஆவணங்களுடன் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்மீது நடவடிக்கை கோரி நெல்லை ராமசுப்பு என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஏற்கெனவே போலி நூல் சர்ச்சையில் சிக்கிய ‘அகல்விளக்கு’ பதிப்பக உரிமையாளர் மோகன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
விசாரணையின்போது, கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) ரத்துச் செய்யப்பட்டுவிட்டதாகவும் இரண்டு மாதங்களில் புதிய கொள்கை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பரிந்துரைக்கப்படாத பல நூல்கள் உயர்நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, அக்காலகட்டத்தில் நூலகத் துறையில் முக்கியப் பொறுப்பு வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமோகன், ஜெயந்தி, ஆர்த்தி ஆகியோர்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து நான்கு வாரங்களில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இவ்வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம் என்று குறிப்பிட்டதுடன் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக விசாரணையின்போது, இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகத் தலைமை நூலகர் காமாட்சியின் வழக்கறிஞர், உயரதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்காமல் கீழ்நிலை அலுவலர்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் போலி நூல்களைக் கண்டுபிடித்தபோது, 19 ஆண்டுகளாகப் பணியில் இருந்த காமாட்சி ஏன் போலிப் புத்தகங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, “பெருமாள் முருகனும் தேர்வுக் குழுவில் இருந்தார். அவரும் அகல்விளக்குப் புத்தகங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு ஆதாரம் உள்ளது,” என்று வழக்கறிஞர் பதிலளித்தார். ஆனால், “பெருமாள் முருகன்மீது குற்றம் சாட்டுவது சரியன்று,” என நீதிபதிகள் கூறினர்.
