மதுரைப் புத்தக விழாவில் ரூ.1.51 கோடிக்கு விற்பனை

மதுரைப் புத்தக விழாவில் ரூ.1.51 கோடிக்கு விற்பனை

படம்: இடிவி பாரத் தமிழ்நாடு

24 Nov 2026 - 5:00 pm

1 mins read

மதுரை: மதுரையில் 11 நாள்கள் நடைபெற்ற புத்தக விழாவை 1.26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். ரூ.1.51 கோடிக்கும் அதிக மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

தமுக்கம் மாநாட்டு மையத்தில் நவம்பர் 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மதுரை புத்தக விழா நடைபெற்றது.

குளிரூட்டப்பட்ட வசதியுடன் 220க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளிலான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

வாசிப்பை ஊக்குவித்தல்,  மதுரையின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் புத்தக விழா நடைபெற்றதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசிப்பை ஊக்குவித்தல், மதுரையின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் புத்தக விழா நடைபெற்றதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. - படம்: இடிவி பாரத் தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் கலை, பண்பாட்டுத் துறை நிகழ்ச்சிகளும் சிந்தனை அரங்கமும் நாள்தோறும் நடைபெற்றன.

மதுரையின் தொன்மையையும் வரலாற்றையும் பறைசாற்றும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்ற ‘மாமதுரை போற்றுதும்’ சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறார்களிடையே வாசிப்பை வளர்க்கத் தினமும் ‘சிறார் அரங்கம்’ நடத்தப்பட்டதோடு, உணவகப் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவுப் பொருள்களும் விற்கப்பட்டன.

பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும் மாணவர்களுக்கு வாகன வசதியும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், புத்தகத் தானப் பெட்டி மூலம் பொதுமக்கள் வழங்கிய 1,000க்கும் மேற்பட்ட நூல்களை அரசுப் பள்ளிகளுக்கும் கிராமப்புற நூலகங்களுக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்