காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்

காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்

படம்: இந்து தமிழ் திசை

22 Sep 2026 - 4:18 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற விழாவில், மாணவர்களுக்குச் சுடச்சுட உணவை நேரில் பரிமாறிய முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.

பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்த அவர், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஏற்கெனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,910 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறுவர். இத்திட்ட விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 217 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் வருகைப் பதிவை உயர்த்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார், சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் விரிவாக்கம் குறித்துப் பெற்றோர்களின் கைப்பேசி எண்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பு அறிவிப்பு குறித்த குறுந்தகவலும் அனுப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்