சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீதான லஞ்சப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு மூன்றாவது முறையாக கடிதம் எழுதியுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தத் துறைக்கு கே.என்.நேரு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். ஏறக்குறைய ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமலாக்கத் துறை வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் ஏற்கெனவே தமிழகக் காவல்துறைக்கு இரண்டு முறை கடிதம் எழுதினர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகத் துறையில் பணிமாற்றம், சீராகப் பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக ரூ.365 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
இதையடுத்து, மூன்றாவது முறை தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். திமுக ஆட்சியின் நிர்வாகம் எந்த அளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது எனத் தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

