கோவை: சத்தமாகப் பாடல் கேட்ட விவகாரம் தொடர்பில் மூண்ட சண்டையில் இளையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் தமிழகத்தின் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது.
இந்நிலையில், தம்பி கொலையான தகவலை மறைத்து, திட்டமிட்டபடி அதற்கு மறுநாள் அவருடைய அண்ணனின் திருமணம் நடத்தப்பட்டது.
கோவையில் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த கோகுலகிருஷ்ணன் என்ற அந்த இளையர், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) தம் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது, அவருக்கும் நாகராஜ், சூர்யா, சந்துரு, சஞ்சய், பிரவீன்குமார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கோகுலுக்கும் மற்ற ஐவருக்கும் இடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்த்தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலைக் குத்திவிட்டுத் தப்பியோடினர். இதனால் கோகுல் அவ்விடத்திலேயே மாண்டுபோனார்.
அதனைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான ஐவரையும் காவல்துறை கைதுசெய்தது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களிடம் விசாரித்தபோது, சில நாள்களுக்குமுன் கோகுலின் உறவினரான தனசேகர் என்பவர், தம் வீட்டிற்கு அருகே வசிக்கும் சிவக்குமார் என்பவர் சத்தமாகப் பாடல் கேட்டதால் அதிருப்தி அடைந்தார்.
அதுபற்றி சிவக்குமாரிடம் தனசேகர் கேட்டபோது, சிவசங்கர், பிரவீன் என்ற இருவரும் தகராற்றில் ஈடுபட்டதாகவும் அப்போது தலையிட்ட கோகுலுக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் அவர்களுக்கு இடையிலான முன்பகை பற்றிக்கொள்ள, அது கொலையில் முடிந்தது
கைதுசெய்யப்பட்ட ஐவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

