21.5 மில்லியன் கைப்பேசி எண்களுக்கு வரவுசெலவுத் திட்டத் தகவல்கள் பகிர்வு

1 mins read
0d52724c-7676-4835-8fbd-cb7ad4dfe421
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் 26 அரசுத் துறைகள் இதுவரை இணைக்கப்பட்டு, தடையற்ற தகவல் தொடர்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: அண்மையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்கள் 2.15 கோடி கைப்பேசி எண்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து அரசுத் துறைகளும் தங்களது செயலிகளின் மூலமாக பொதுமக்களுக்கு குறைந்த செலவில் வாட்ஸ்அப் சேவைகளை வழங்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் 26 அரசுத் துறைகள் இதுவரை இணைக்கப்பட்டு, தடையற்ற தகவல் தொடர்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் இதன்மூலம் பொதுமக்களுக்கு 1.87 கோடி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து 22.79 லட்சம் கைப்பேசி எண்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான காணொளி செய்திகள் 1.59 கோடி, பட்ஜெட் பரப்புரை தகவல்கள் 2.15 கோடி, திறன் போட்டி குறித்த தகவல்கள் 6.88 லட்சம், முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த செய்திகள் 45.75 லட்சம், இஸ்ரோ விஞ்ஞானிகளை கெளரவிக்கும் நிகழ்வு 57.37 லட்சம் கைப்பேசி எண்களுக்கும் பகிரப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் வாட்ஸ்அப் சேவையானது கோடிக்கணக்கான மக்களுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள தகவல்களை வழங்குவதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்