தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், பாலமேட்டில் திங்கள்கிழமை (ஜனவரி 16) நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாலமேட்டில் இன்று திங்கள்கிழமையும் அலங்காநல்லூரில் நாளை செவ்வாய்க்கிழமையும் போட்டி நடக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் இன்று 800 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 355 இளையர்கள் முறைப்படி பதிவுசெய்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோல் வீரர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசு, இரு சக்கர வாகனம், சைக்கிள், பீரோ, வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்வேறு கண்கவர் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கி வந்தனர். இதுவரை நடந்த போட்டியில் 30 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காளை முட்டியதில், படுகாயமடைந்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுவரை நடந்த சுற்றுகளில் 9 காளைகளைப் பிடித்து 3வது இடத்தில் அவர் இருந்தார்.

