ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 74 பேர் காயம்

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 74 பேர் காயம்

1 mins read
589d22c9-a4c8-4fbe-a17d-64a1966ac2ad
படுகாயமடைந்த பத்துப் பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். படம்: தமிழக ஊடகம் -

இவ்வாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நேற்று 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் நடந்தேறியது.

தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்றுக் காலை இப்போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்துவரப்பட்ட 484 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்திய மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம், கட்டில், நாற்காலி, மின்விசிறி, மிக்சி, பிரஷர் குக்கர், ரொக்கப் பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

போட்டியில் 17 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், களத்தில் நின்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த காளையின் உரிமையாளரான தஞ்சை மாவட்டம், மருதகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமுற்றனர். படுகாயமடைந்த பத்துப் பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக, வழிகாட்டி நெறிமுறைகளின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதால் இப்போட்டி ஏற்கெனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.