தமிழ்நாட்டின் திருப்பத்தூர் அருகே வினோதமான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. வெளியூருக்கு சென்று வீடு திரும்பிய வெங்கடசேன் என்பவர் தனது வீட்டின் மேற்கூரையின் ஓடுகள் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டார். உடனே காவல்துறையினரை அழைத்துள்ளார்.
வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டுக் கதவை திறந்து உள்ளே செனறு பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். படுக்கை அறையில் ஆடவர் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டனர்.
அந்த ஆடவரை தட்டி எழுப்பினர். போதையில் இருந்த அவரை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசரித்ததில் என்ன நடந்தது என்று விவரம் வெளியானது.
27 வயதான சுதந்திரதிருநாதன் எனும் அந்த ஆடவர் வெங்கடசேன் வீட்டிற்கு திருட வருவதற்கு முன்பு மது அருந்தியுள்ளார். கூடுதலாக மதுவும், சாப்பிடுவதற்கு பிரியாணி பொட்டலமும் வாங்கி வந்துள்ளார்.
மேல்கூரைமீது ஏறி ஓடுகளை பிரித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வீட்டில் இருந்த தொலைபேசி, பாத்திரங்கள், மின்விசிறி, உள்ளிட்ட பொருட்களை எடுத்து திருடிச் செல்லும் நோக்கத்துடன் ஒரு ஓரத்தில் வைத்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லை என்பதால், சற்று ஓய்வு எடுக்க சுதந்திரதிருநாதன் எண்ணியுள்ளார். திருடிய களைப்பினால் மேலும் மது அருந்திவிட்டு, பிரியாணியை ஒரு கை பார்த்துவிட்டு சாப்பிட்ட களைப்பில் மெத்தையில் உறங்கியுள்ளார்.
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல் நீண்டநேரம் தூங்கிய திருடன் அகப்பட்டான்.

