கோவை: கொள்ளையடித்த நகை, பணத்தைக் கொண்டே ரூ. 4.5 கோடி மதிப்பில் ஒரு நூற்பாலையையும் இரண்டு கார்களையும் வாங்கிய ஆடவரைத் தமிழகக் காவல்துறை கைதுசெய்தது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த 68 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடிவந்தது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று, காவல்துறையினர் தடயங்களைத் திரட்டினர். அதனடிப்படையில் ‘ராட்மேன்’ மூர்த்தி என்பவரையும் அவரது கூட்டாளியான அம்சராஜ் என்பவரையும் காவல்துறை கைது செய்தது.
அதன் தொடர்பில் அவர்களை விசாரித்தபோது, கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே ‘ராட்மேன் மூர்த்தி கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு விருதுநகர் மாவட்டத்தில் நூற்பாலை வாங்கி, தொழிலதிபரானது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் அதன்மூலம் 1,500 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.
கொள்ளையடிக்கும் நகைகளை அவர்கள் சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் என நால்வரிடம் கொடுத்து பணமாக மாற்றியதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், தங்கம், ரொக்கம், கார்கள், விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இவ்வழக்கில், மனோஜ்குமார், சுதாகர், ராம்பிரகாஷ், பிரகாஷ் என மேலும் நால்வரையும் காவல்துறை தேடி வருகிறது.