கிருஷ்ணகிரி: தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மலையில் இருந்து நேற்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது.
இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல் தெருவில் வசித்து வந்த வெங்கடாசலனத்தின் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாறை அவர் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும் அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
பாறை உருண்டு விழுந்தபோது பயங்கரமான சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பமும் அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.
அந்த மேல் தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.