சென்னை: சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வரும் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதற்கு முன்னதாக வளர்ச்சித்திட்ட ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், பட்ஜெட்டுடன் வரு[Ϟ]வாய்த் துறை தொடர்பான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த விவாதக் கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு ஆட்சேபம் இல்லாத புறம்போக்குப் பகுதிகளில் 29,187 பேர் பட்டா இன்றி குடியிருக்கின்றனர். இது முதல்வரின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, அவர்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் இதேபோலப் பிரச்சினை இருக்கிறது. அங்கு இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 57,084 பேருக்குப் பட்டா வழங்க அறிவறுத்தியுள்ளார்.
அந்த வகையில், சுமார் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் கூறியுள்ளார். இதுதவிர, யாராவது விடுபட்டிருந்து மனுக்கள் கொடுத்தால் அதையும் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார்.

