ரூ.39,000 கோடி மதிப்புள்ள புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

2 mins read
f4610c32-e4f9-4f2e-8f99-8f1d2f9773ad
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம். - படம்: ஊடகம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏறக்குறைய ரூ.39 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த முதலீடுகள் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

“இந்த முதலீடுகள் மின்னணுத் துறை சார்ந்த, குறைந்த மின்னழுத்த பேனல்கள், தொலைபேசித் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிப்பாகங்கள், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிப்பாகங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகள், அதற்கான செயலிகள், பாதுகாப்புத் துறைக்கான கருவிகள், மருத்துவத்துறை சார்ந்த ஊசி மருந்துகள், இதர மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

மேலும், எந்தெந்த நிறுவனங்கள் இந்த முதலீடுகளைச் செய்கின்றன, அவற்றின் மூலம் எத்தனை பேருக்கு அந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் அளிக்க உள்ளன எனும் விவரங்களையும் அவர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9,000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5,000 பேர்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13,180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14,000 பேர்), தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3,000 பேர்) ஆகியவை தவிர, மேலும் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்