சென்னை: தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளித் தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழகத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா பேசினார்.
“தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் புதிய தொழில் பிரிவுகளில் தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். இதையொட்டி ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - 2025’ க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடிக்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. அதேபோல, குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் விண்வெளி துறைக்கான தொழில்நுட்பத்தில் தகுதியான, திறமையான நபர்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவை அனைத்தும் உயர்தர வேலைவாய்ப்புகள் ஆகும்.
“தமிழகத்தில் எப்போதும் உற்பத்தி துறையில்தான் கவனம் செலுத்துவோம். ஆனால், இந்த முறை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசின் விண்வெளித் தொழில் கொள்கை, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் நலன் அடைவதற்காக உருவாக்கப்பட்டது என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
“தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கியதிலிருந்து, தமிழக விண்வெளித் தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதியிலிருந்து ஸ்டாலினின் மருமகனான சபரீசன், வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில் கொள்கை என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.