சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. விரைவில் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முக்கியத் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்துக்கு அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என திரு ஸ்டாலினும் திமுக எம்.பி.க்கள் பலரும் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

