விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம்

விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம்

2 mins read
e49bafef-a68d-4140-9206-b75e353cbd4d
தமிழ்நாட்டில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கத் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: டிவி9 தமிழ்
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதல்வர் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்பின்னர் இலாக்கா மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

நிர்வாகத் திறனில் பின்தங்கியவர்கள், சர்ச்சைகளில் சிக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தலைமை முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. குறிப்பாக, சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் ‘கில்லி’ சரத்குமார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவெளியில் முரண்பாடாகப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடமிருந்து இத்துறை பறிக்கப்பட்டு, கூட்டுறவுத் துறை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

நிர்வாகத்தை விரைவுபடுத்தத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பதிலாக ஆதவ் அர்ஜுனாவிடம் தொழில்துறை ஒப்படைக்கப்படலாம். செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் உள்ள பள்ளிக்கல்வித் துறை, அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கூட்டணிக் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதனின் உயர்கல்வித் துறை, அமைச்சர் பிரபுவின் கனிமவளத் துறை ஆகியவையும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. மீன்வளம், கைத்தறித் துறை அமைச்சர்களான ஸ்ரீநாத், விஜய் பாலாஜி இடையே பொறுப்புகள் பரஸ்பரம் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நிர்வாகத் திறனில் பின்தங்கியவர்கள், சர்ச்சைகளில் சிக்குபவர்கள், மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதியாகியுள்ளது. செயல்திறன் மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, அரசு நிர்வாகத்தை மேலும் வேகப்படுத்தவும், மக்கள் மத்தியில் அரசுக்கான நற்பெயரை வலுப்படுத்தவுமே இந்த அதிரடி மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுஅமைச்சரவைசட்டமன்றம்விஜய்பதவி மாற்றம்