சென்னை: தேவையான தகவல்களை அளிக்காவிடில் எவ்வித அறிவிப்புமின்றி பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக திரும்பப் பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2024-25ஆம் கல்வியாண்டில் 433 தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.
இந்நிலையில், 2025-26ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் தொழில்நுட்ப படிப்புகளில் இளங்கலை, முதுகலைப் படிப்பிற்கு அனுமதி பெறுவதற்குமான நிபந்தனைகள் குறித்து https:https://www.annauniv.edu/cai/index.php என்ற இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம் என அப்பல்கலைக்கழகப் பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆசிரியர் ஒவ்வொருவரின் கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் உரிய கல்வித் தகுதியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களின் விவரங்கள் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை போன்றவை ஆய்வு செய்யப்படும்,” எனக் கூறப்பட்டுள்ளது.
“கடைசித் தேதிக்குள் இணையம் வழியாக விவரங்களைச் சமர்ப்பிக்காத தனியார் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது. முதுகலைப் பாடத்திட்டத்திற்கு முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் இருக்க வேண்டும். அந்தத் தகுதி கட்டாயம். தவறினால் இணைப்பு நீட்டிக்கப்படாது. தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஓர் அறிவிப்பும் இன்றி தற்காலிகமாக ரத்து செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவந்த பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்தியது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களைப் பதிவுசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

