அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் மீட்டர்’ ஒப்பந்தப்புள்ளி ரத்து

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் மீட்டர்’ ஒப்பந்தப்புள்ளி ரத்து

படம்: ஊடகம்

01 Jan 2025 - 8:09 pm

1 mins read

சென்னை: அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட திறனளவி (ஸ்மார்ட் மீட்டர்) தொடர்பான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ‘ஸ்மார்ட் மீட்டர்’களைக் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது.

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காக நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மும்பையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனமானது (ஏஇஎஸ்எல்), குறைந்த தொகையில் முதல் தொகுப்புக்கான ஏலத்தைக் கைவசப்படுத்தியது.

இந்த முதல் தொகுப்பில் சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் உள்ளன.

மொத்தம் 82 லட்சத்துக்கும் அதிகமான ‘ஸ்மார்ட் மீட்டர்’களை ஏஇஎஸ்எல் நிறுவும் எனக் கூறப்பட்டது.

அதானி குழுமம் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் நிலையில், அதைக் கொள்முதல் செய்ய இந்திய அதிகாரிகளுக்கு, தொழிலதிபர் அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாகக் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்தே ஏஇஎஸ்எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்வதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏஇஎஸ்எல் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டிருந்த விலை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததாகவும், அதையடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்