‘மீனவர்கள் புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து’

‘மீனவர்கள் புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து’

1 mins read
புதுச்சேரி அரசு அறிவிப்பு
e5479949-970c-4663-a46a-e2dda228d5c5
படம்: - இந்து தமிழ் திசை ஊடகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்கள் தடையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

கனமழையைத் தொடர்ந்து அங்கு 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை (அக்டோபர் 16) காலை முதல் மழை பெய்யவில்லை.  

முன்னதாக வானிலை ஆய்வகத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை மீனவர்களை எச்சரித்திருந்தது.

ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையேற்று பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். மூன்றாவது நாளாக புதன்கிழமை யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் புதுச்சேரியில் அனைத்துப் படகுகளும் பாதுகாப்புடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், காலை முதல் மழை பெய்யவில்லை. வெயில் அடிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் ஒரு சிலர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றிருப்பதாக மீன்வளத் துறைக்குப் புகார் வந்தது. உடனடியாகக் கரைக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தடையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்