தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நதிகள், கால்வாய் அருகில் வசிப்போருக்குப் புற்றுநோய் பரவும் அபாயம்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

2 mins read
41280f2b-c8c7-456f-a1fe-b790bd789c93
ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வுக்கான விவரங்களை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சு மார்ச் 11ஆம் தேதி மாநிலங்களவையில் வெளியிட்டது.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நதிகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போருக்குப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் (ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது.

இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆற்று வடிகால்கள், கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களின் அருகில் வசிக்கும் மக்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதைத் தடுக்க நாடு முழுவதும் இதுவரை 770 மாவட்ட மருந்தகங்களும் சமூக சுகாதார மையங்களில் 6,410 மருந்தகங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வுக்கான விவரங்களை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சு மார்ச் 11ஆம் தேதி மாநிலங்களவையில் வெளியிட்டது.

அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி ஈயம், இரும்பு, அலுமினியம் போன்ற தாதுக்கள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்தபோது கூறினார்.

நதிகள், திறந்த வடிகால்களில் உள்ள மாசடைந்த நீரை நீண்டகாலமாகப் பயன்படுத்திவரும் மக்களின் உடலில் வேதியியல் கழிவுகள், கனிமங்கள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை படிந்து அவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆய்வின் மூலம் இப்படிப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியானதை அடுத்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாசைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், தொழிற்சாலைகளுக்குக் கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்