தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எங்கே செல்லும் இந்தப் பா(போ)தை?

5 mins read
a906d48e-ce75-4c7e-a4a5-b3c7ce4c7b96
‘மூலிகை வனம் மதிகெட்டான் சோலை’ முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை. - படம்: ஊடகம்
multi-img1 of 2

போதை என்பது திரவ வடிவத்தில் மட்டுமல்ல; மாத்திரையாக, பொடியாக (பவுடர்), பதப்படுத்தப்பட்ட இலையாக பற்பல வடிவங்களில் தெரிந்தும் தெரியாமலும் விற்கப்படுகிறது.

இதில் சில போதை வகைகள், குறிப்பாக கஞ்சா, தமிழக அரசு விற்கும் மதுவைவிட விலை குறைவானது. போதை இருக்கும். ஆனால், போதை வாசனை இருக்காது என்பதால் கஞ்சாவை நாடி இளம் வயதிலேயே சப்தநாடியும் ஒடுங்கிப் போகிறார்கள் இளையர்கள்.

‘மதிகெட்டான் சோலை’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலையில் உள்ள அடர்வனப் பகுதிக்குள் இந்தச் சோலை இருக்கிறது. வனத்துறையினர் இந்த சோலைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.

காரணம்… அந்த சோலைப் பகுதியில் இயற்கையிலேயே மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய, கிளர்ச்சியூட்டக்கூடிய வாசனை கொண்ட செடிகள் நிறைந்திருக்கும்.

தப்பித்தவறி இந்தச் சோலைக்குள் எவ்வித போதைப் பழக்கமும் இல்லாதவர்களும் இருப்பவர்களும் சென்றுவிட்டால் அந்த வாசனையைக் காற்றின் மூலம் சுவாசித்து தங்களை அறியாமலேயே போதை வசப்படுவார்கள்.

அவர்களால் சோலைக்குள் இருந்து வெளியே வர வழி தெரியாமல் சுற்றிச்சுற்றி வருவார்களாம். வனத்துறையினரோ… வனத்தை நன்கு அறிந்தவர்களோதான் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வர முடியும். புத்தியையே மழுங்கடிப்பதால்தான் அதனை மதிகெட்டான் சோலை என்கிறார்கள்.

கஞ்சா போன்ற இயற்கைப் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள், வாழ்க்கை எனும் பாதையில் போகுமிடம் தெரியாமல் மதிகெட்டுத்தான் அலைய வேண்டும்.

கஞ்சா:

‘உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்... தப்பு செய்தவன் கம்பி எண்ண வேண்டும்!’ - இதுதான் நியாயம்.

ஆனால்... ஒரு குற்றத்தின் வளர்ச்சியை ஒழிக்க சட்டம் புதுப்புது திட்டம் போட்டால், குற்றம் செய்பவர்களோ அதிலிருந்து தப்பிக்க புதுப்புது திட்டங்களை அறையெடுத்து யோசிக்கிறார்கள், என்ன செய்வது?

இருப்பினும், தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவது போதை வியாபாரிகளை அச்சப்படவும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோரை கலவரப்படவும் செய்திருக்கிறது.

உண்மையில் காவல்துறை நடவடிக்கையால் கஞ்சா பயன்பாடு குறைந்துவிட்டதா? கள நிலவரம் என்ன?

மிளகாய் மூட்டை; கஞ்சா வேட்டை:

சென்னை கொரட்டூரில் நடந்த சம்பவம் இது.

கொளத்தூர், பூபதி நகரைச் சேர்ந்த மோகன்லால் என்பவர் நடத்தி வந்த மளிகைக் கடைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமானோர் வந்துள்ளனர். இதனால் சந்தேகப்பட்டு காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்தபோது, ‘டோக்கன் சிஸ்டம்’ மூலம் மாணவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை அவர் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் மிளகாய் மூட்டைக்குள் பதுக்கி வைத்து அவர் கஞ்சாவை விற்று வந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

போர்வைக்குள் போதை:

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட தாழம்பூரில் காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 45 கிலோ கஞ்சாவும் 1,400 போதை மாத்திரைகளும் ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேர் கைதாகினர்.

ஆந்திராவில் இருந்து போர்வைகளை விற்பனைக்கு எடுத்து வருவதுபோல் காட்டிவிட்டு அதன் உள்ளே கஞ்சா, போதை மாத்திரைகளை இந்தக் கும்பல் கொண்டு வந்திருக்கிறது.

இப்படி கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, பல ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுமட்டுல்ல, கஞ்சா விற்பனை மூலம் அவர்கள் சேர்த்த சொத்துகளும் முடக்கப்பட்டன.

கஞ்சாவால் உண்டாகும் கெடுதல்கள் என்ன?

மது அருந்தியவனின் கோபம், போதை தெளிந்தவுடன் தணிந்துவிடும். ஆனால், கஞ்சா அடித்தவன் ஒரு விஷயத்தை மனதில் நினைத்துவிட்டால், அதை முடிந்தளவு நிகழ்த்தாமல் விடமாட்டான்.

கஞ்சா விற்பனையாளர்களைப் பற்றி காவல்துறைக்குத் துப்பு கொடுக்கும் சமூக சேவகர்களை, கஞ்சா வியாபாரிகள் தமது வாடிக்கையாளர்கள் சிலருக்கு இலவசமாக கஞ்சாவைக் கொடுத்து கொலை செய்ய வைக்கும் கொடுஞ்செயலும் நடக்கிறது.

“குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று சொல்வது முக்கியமல்ல. குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் முக்கியம்,” என்று காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பல வடிவங்கள் எடுக்கும் போதைப்பொருள்:

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் சட்டத்தின் கண்ணில் மண்ணைத்தூவ, வெவ்வேறு வடிவங்கள் எடுக்கின்றன.

கஞ்சா சாக்லெட், அபின் பேஸ்ட், மாத்திரை, ட்யூப் மாத்திரை வடிவ பவுடர் ஆகிவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

“இந்திய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இளையர்கள். தன்னைத்தானே அழித்துக் கொண்டு சமூகத்தையும் அழிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடக் கூடாது. சாகசத்துக்காக தொடங்கும் இந்தப் பழக்கம் அடிமையாக்கிவிடும்.

“அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மாணவர்கள் தயவு செய்து போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. நாட்டின் எதிர்காலமும் அவர்களின் நலனும் அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்,” என முன்பொரு பேட்டியில் தெரிவித்திருந்தார் காவல்துறை அதிகாரியான எம்.ரவி ஐபிஎஸ்.

மகனைக் கொன்ற தந்தை:

தமிழகத்தின் மிக முன்னோடியான புலனாய்வுப் பத்திரிகையின் மதுரை நிருபராக இருந்தார் ஒருவர். மிகச் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர். அவர் மனைவி ஆசிரியை.

இருவரும் எப்போதுமே வேலையில் மூழ்கி இருப்பார்கள். மகனிடம் மனம்விட்டுப் பேச நேரமில்லை. அதேசமயம் மகன் கேட்பதையெல்லாம் வாங்கி மட்டுமல்ல, அள்ளித் தரும் அளவுக்குச் செல்லமாக வளர்த்தனர்.

மகன் இளைஞன். தீய பழக்கங்கள் அந்த இளைஞனைப் பற்றிக்கொண்டன. சொத்தை விற்கச் சொல்லியும் பணம் கேட்டும் அடிக்கடி தொல்லை தந்த மகனை, ஒருநாள் தங்கள் தோட்டத்தில் வைத்து தந்தையே அடித்துக் கொன்று, புதைத்தார்.

சிறையில் நடிகரின் மகன்:

இது இந்த மாதம் நடந்த சம்பவம்.

மிகவும் பரபரப்பான நடிகர் அவர். தன் மகனையும் இப்போது நாயகனாக்கி ஒரு படம் தயாரித்து வந்த நிலையில், இணையம் மூலம் கல்லூரி மாணவர்களைத் தொடர்பு கொண்டு, போதைப் பொருள்களைப் பொட்டலம் போட்டு விற்றதுடன், நடிகரின் மகனும் பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவர, சில கல்லூரி மாணவர்களுடன் அந்த நடிகரின் மகனும் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

“ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்க்கும் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளிடம் நின்று பேசகூட நேரமில்லை. இதனால் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாத அவன் என்னென்னவோ செய்கிறான்.

“நாளைய சமூகத்துக்கு ஒரு பணக்கார மகனை விட்டுச்செல்ல நினைக்காதீர்கள் பெற்றோர்களே... ஒரு நல்ல குடிமகனை உருவாக்கித்தர நினையுங்கள்.

“பிள்ளைகளிடம் பேசுங்கள்; பேசித் தீராத பிரச்சினைகளே இல்லை.

“பணம் சம்பாதிப்பது எளிது... குணம் சம்பாதிப்பது எளிதா? என்று யோசித்துப் பாருங்கள்,” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

குறிப்புச் சொற்கள்