சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) சோதனை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையால் சோழிங்கநல்லூரில் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் சோதனையிட்டனர்.
சோழிங்கநல்லூரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் 11 குழுக்களாகப் பிரிந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி, மூன்று மணிநேரம் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செம்மஞ்சேரி பகுதி உதவி ஆணையர் உறுதி செய்தார்.
கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இனி போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளும் கண்காணிப்பும் நீடிக்கும் என்றும் அவற்றை விற்போர், பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
வழக்கமாக அதிகாலை வேளையில் சோழிங்கநல்லூர் பகுதி அமைதியாகக் காணப்படும். இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.
எனினும், காவல்துறையினர் உரிய விளக்கங்களை அளித்த பிறகு அனைவரும் அமைதி அடைந்தனர்.


