தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கஞ்சா புழக்கம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது

2 mins read
fa7ce6bb-97ca-4554-aee2-9978abd7c56d
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மூன்று பயிற்சி மருத்துவர்களை காவல்துறை கைது செய்தது.

முன்னதாக, மாணவர்கள் விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 150 கிராம் கஞ்சா, ஊசி வடிவிலான ‘கேட்டமைன்’ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் காவல்துறை, தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வேறு சில மாணவர்களுக்கும் கஞ்சா விவகாரத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் வந்தன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் தங்குவிடுதியில் பல்வேறு போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த அத்தகவலை அடுத்து, காவல்துறை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

இதில், ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய மூன்று பயிற்சி மருத்துவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தப்பியோடிய மாணவர்கள் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

பயிற்சி மருத்துவர்கள் சிலர் இந்தப் போதைப் பொருளைக் கூட்டாகப் பயன்படுத்தி வந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில்தான் மாணவர்கள் கஞ்சா வாங்கினர் என்பது உறுதியானதை அடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ரோட்னி ரோட்ரிகோ என்பவர் கைதானார். அவரிடம் இருந்து, 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்