கோவை: கோவை கல்லூரி மாணவர்கள் தங்குமிடங்களில் கஞ்சா, ஆயுதங்கள், பதிவெண் இல்லா பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி பயிலும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை காவல் துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25 சோதனை மேற்கொண்டதில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், 42 திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனையில் கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்ட விரோதச் செயல்களில், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் மாணவர்கள் என்ற பெயரில் கஞ்சா விற்பனை செயல்களில் ஈடுபடுவதாகக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
“தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) 250க்கு மேற்பட்ட காவல் துறையினர் 5 குழுக்களாக பிரிந்து செட்டிபாளையம், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று சூலூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறினார்.
போதைப் பொருள்கள் பயன்பாடு, குற்றப் பின்னணி உள்ள நபர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, கல்லூரிகளில் குழு அமைத்துக்கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு தரும் உரிமையாளர்கள், அவர்களின் முழு விவரங்களை பெற்றுக் கொள்ளவேண்டும். வீடு வாடகைக்கு தருவோர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கல்லூரி படிக்கும் மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு கார்த்திகேயன் தெரிவித்தார்.