வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவை நீக்கக் கோரிக்கை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு தொடர்பில் மனு தாக்கல்
503d76e0-b92a-4daa-89b9-b0316d7c3cf1
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் இதன் தொடர்பில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) பிரிவின்கீழ், பட்டியலினப் பிரிவைச் சாராத ஒருவர், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியலினச் சமூகத்திற்கு எதிராகப் பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படுவது அரிதிலும் அரிது. மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32வது பிரிவின்கீழ், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“எனவே இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை, செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்தச் சட்டப்பிரிவின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஜெகன் தரப்பில், இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் செயலர் மற்றும் மத்திய சட்ட அமைச்சின் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்