சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
224 தனியார் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
பேராசிரியர் எஸ். மாரிச்சாமி 11 கல்லூரிகளில் பணியாற்றுவதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஒய். ரவிக்குமார் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு கல்லூரிகளில் பணி செய்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், தற்போதைய உயர் அதிகாரிகள் 10 பேர் (முன்னாள் இயக்குநர், துணை இயக்குநர்கள், முன்னாள்/தற்போதைய பதிவாளர்கள் உட்பட) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை பகுதிகளைச் சேர்ந்த 4 தனியார் கல்லூரிகள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறைகேடுகள் கல்வித் தரத்தைப் பாதிப்பதாகக் கூறி, குற்றச்சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

