புதுடெல்லி: கோயம்புத்தூர், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இயங்கிவரும் ஈஷா யோகா மையத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வழக்கை 2022 டிசம்பரில் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இப்போது, அந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, “ஈஷா யோகா மையத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், யோகா கற்றுக்கொடுக்கும் ஈஷா மையத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை,” என்றார்.
இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ். ராமனிடம், “தமிழக அரசு இரண்டு ஆண்டுகள் கழித்து மேல்முறையீடு செய்திருப்பதன் நோக்கம் என்ன, முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்குத் தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இரு துறைகளுக்கிடையே நிலவிய குழப்பம் காரணமாக மேல்முறையீடு செய்யக் காலதாமதம் ஆனது. கடந்த 2012ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்துக்குச் சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் கல்வி மையம் எனக்கூறி விலக்குக் கோருகின்றனர்,” என்றார்.
ஈஷா யோகா மையம் தரப்பு வழக்கறிஞர் முகுல், “ஈஷா மையத்தில் 20 விழுக்காட்டு இடத்தில் மட்டுமே கட்டடங்கள், எஞ்சியுள்ளவை பசுமை வெளியாக விடப்பட்டுள்ளன என்றார்.
மேலும், பிப்ரவரி 26 ஆம் [Ϟ]தேதி அன்று மாசி மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருப்பதால் அதன்[Ϟ]பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார். அதையடுத்து நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைப்பதாகத் தெரிவித்தனர்.