தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்கள் மீதான வழக்கு: அடுத்தடுத்து விலகும் நீதிபதிகள்

2 mins read
7ff6bf99-2812-4d58-9653-06ba7962fcb8
இந்திய உச்ச நீதிமன்றம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் திடீரென விலகியது புது விவாதங்களை எழுப்பியுள்ளது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.

அவ்வழக்கிலிருந்து இருவரும் பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அத்தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்தினார்.

பின்னர் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் இருவரும் மேல்முறையீடு செய்தபோது உச்ச நீதிமன்றம் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்விலிருந்து தாம் விலகுவதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவித்தார்.

அதே நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீதிபதிகள் நீட்டித்தனர்.

இதற்கு முன்னர், மேலும் சில முக்கியமான வழக்குகளிலிருந்து நீதிபதிகள் இவ்வாறு விலகிவிட்டனர்.

டாஸ்மாக் முறைகேட்டு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கத் தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் ஆகியோர் கடந்த மார்ச் 25ஆம் தேதி விலகினர்.

இதேபோல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகுவதாக கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை வழக்கில்இருந்து நீதிபதி சுந்தர், அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரிய மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதி சக்திவேல் ஆகியோரும் இவ்வாறு விலகுவதாக அறிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்