எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்குள் அத்துமீறியதாக அமலாக்கத் துறையினர்மீது வழக்கு

2 mins read
3972fffd-9b64-405e-ba0d-e012afccecb1
சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக தமிழ் நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. - படம்: இந்து தமிழ்த் திசை

சென்னை: சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள விடுதிக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென புகுந்தனர். அதையடுத்து அவர்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ் நாடு காவல்துறை, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது அமைச்சர் வீட்டில் பூட்டிக் கிடந்த ஓர் அறையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பேற்பட்டது.

இதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, எம்எல்ஏ விடுதிக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்குச் சென்றனர்.

அங்கு, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரமாகக் காத்திருந்த நிலையில், அந்த விடுதிக்கு வந்த சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசனுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினரின் அறையைத் திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி அறையிலும் சோதனையிட வருவதாகத் தகவல் வெளியான நிலையில், அமைச்சரின் அறை பூட்டப்பட்டது.

இதனிடையே, எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்