தேனி: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த புகாரின் பேரில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஏகராஜ், அவரது மனைவி பிளாரன்ஸ் ஆகிய இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
58 வயதான ஏகராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.
தேனி நகராட்சி ஆணையராக 10 மாதங்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த இவர், தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார்., இவரது மனைவி பிளாரன்ஸ் சென்னை மதுரவயல் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019 முதல் 2024 வரை ஏகராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் தேனி அரசுக் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஏகராஜ், அவரது மனைவி பிளாரன்ஸ் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்தனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு தட்டச்சராகப் பணியில் சேர்ந்த ஏகராஜ், 23 ஆண்டுகளுக்குப் பின் 2017ல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
நாகப்பட்டினம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஊட்டி நகராட்சிகளில் ஆணையராகப் பணியாற்றிய அவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது குற்றஞ்சாட்டி உள்ளது.