தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

1 mins read
7deb66af-aace-4a31-ba95-f433065812af
வைத்திலிங்கத்தின் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. - படம்: ஊடகம்

சென்னை: கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். மொத்தம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் தற்போது ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். லஞ்சம் பெற்ற வழக்கில் அவரது இரண்டு மகன்கள் உள்பட மேலும் பலர் சிக்கியுள்ளனர். மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உரந்தைராயன் குடிகாடு பகுதியில் இருக்கும் வைத்திலிங்கத்தின் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

அப்போது வைத்திலிங்கம் வீட்டில் இல்லை. எனினும் அவரது உதவியாளரிடம் இருந்து வீட்டுச்சாவியைப் பெற்று அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்