சென்னை: அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை விட்டு விலகியவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய காலத்தில் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை விட்டு விலகி வேறு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் செலவை அவர்களிடம் வைப்புத் தொகையாக வசூலிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வரவும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை எனத் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும் எனக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
