கல்லூரிச் சேர்க்கையில் சாதி விவரங்கள்: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கல்லூரிச் சேர்க்கையில் சாதி விவரங்கள்: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
9bb0cebe-2c81-40c5-8752-cb13a3d85878
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி சேர்க்கையைப் போல, கல்லூரி மாணவர் சேர்க்கையின்போதும் சாதி விவரங்களைக் கேட்பதைத் தவிர்க்கும் வகையில் அரசாணையை விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இப்பிரச்சினை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

“தனியார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின் போது மாணவர்களின் சாதி விவரங்களைச் சேகரிக்கத் தடை விதிக்க வேண்டும். விண்ணப்பங்களில் சாதி விவரங்களைக் கேட்பது சேர்க்கை நடைமுறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகுக்கும்,” என அவர் வலியுறுத்தி இருந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் 2000ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை சுட்டிக்காட்டப்பட்டது. பள்ளிச் சான்றிதழ்களில் பெற்றோர் விரும்பினால் சாதி, சமயக் குறிப்புகளைத் தவிர்க்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மனுதாரர் தரப்பில், இந்த அரசாணை கல்லூரிகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளிச் சேர்க்கையைப் போலவே கல்லூரி மாணவர் சேர்க்கையின்போதும் சாதியைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை என அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக அரசு விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்