சென்னை: நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
அப்புகாரில், தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியாகப் பத்திரப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவுக் காவல்துறையினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட எழுவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அம்மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே, எம்.ஆர். விஜயபாஸ்கர் வடஇந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுவதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிசிஐடி காவல்துறையினர் வடமாநிலங்களில் முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.