தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கக் கடத்தல் முறைகேடு தொடர்பாக சென்னையில் ஆறு இடங்களில் சிபிஐ சோதனை நடவடிக்கை

1 mins read
0ea70545-36fa-454f-8c5e-983c23cae3bc
சென்னையில் மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை உள்ளிட்ட ஆறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். - படம்: ஊடகம்

சென்னை: தங்கக் கடத்தல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு புகார்களின் பேரில், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் ஆறு இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இது பல மணிநேரம் நீடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை, மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகளின் துணையுடன் கடத்தல் நடப்பதாக ஒருதரப்பினர் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில், கர்நாடகாவில் நடிகை ரன்யா ராவ் என்பவர், துபாயில் இருந்து 12.5 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்தபோது பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.

தனது தந்தை காவல் அதிகாரி என்பதால், அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரன்யா தங்கக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அவர் கைதான நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் சிலரும் இதேபோல் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் உதவியது தெரியவந்ததை அடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதன் அடுத்த கட்டமாக, சென்னையில் மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை உள்ளிட்ட ஆறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சுங்கத்துறை அதிகாரி, தனியார் நகைக்கடை உரிமையாளரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தச் சோதனை தொடக்க நிலையில் இருந்தது. எனவே, உடனடியாக விவரங்களை வெளியிட இயலாது. சோதனை நடவடிக்கையின்போது முறைப்படி அறிக்கை வெளியிடப்படும்,” என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்