சேலம்: ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு, சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பிறகு ஓராண்டு தலைமறைவாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களிடம் இருந்த ஆயுதங்களை ஒரு மரத்தின் அடியில் ஒளித்து வைத்துச் சென்றதாகவும் ஓராண்டுக்குப் பிறகு அவற்றை மீண்டும் எடுத்து நெருப்பில் வாட்டி சுத்தப்படுத்தி பூசை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் நாளைச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடுகிறார்கள்.
ஆடி மாத முதல் நாளன்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் பண்டிகை நடைபெறுகிறது. இதற்காக புதுமணத் தம்பதியரை அழைத்து பெற்றோர் சீர்வரிசை செய்வது வழக்கம். மேலும், புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.
தேங்காயைத் தரையில் தேய்த்து, அதிலுள்ள மூன்று கண்களில் ஒன்றில் மட்டும் ஓட்டை போட்டு நீரை வெளியேற்றுவர். பின்னர் தேங்காய்களின் உள்ளே பச்சரிசி, தானியங்கள், வெல்லம், பொட்டுக்கடலை, அவல், எள் ஆகியவற்றை போட்டு, மஞ்சள் பூசி, அழிஞ்சி எனப்படும் மரத்தின் குச்சியில் சொருகி நெருப்பில் சுடுவார்கள். இதையடுத்து, அந்தத் தேங்காயைப் பிள்ளையாருக்குப் படையலிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி மகிழ்வர்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் தேங்காய் சுட்டு, ஆடி மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆடி மாதம் வளமும் நலமும் தரவேண்டும் என அனைவரும் ஒன்றுகூடி இறைவனை வேண்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.


