தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2027ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு

2 mins read
5a77bcd4-8fad-4948-95db-677418350780
 முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 2027 மார்ச் 1ஆம் தேதியன்று தொடங்கும் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முன்னதாக டெல்லியில் புதன்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகண்டில் மட்டும் இந்த செயல்முறை அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு முன்பு இந்தியாவில் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது.

இதனிடையே, 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போட்டு, பாஜக சதி செய்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

“தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணை போகிறவராகவும் இருக்கிறார்.

“டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது,” என்றும் திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகத் தெரிவித்துள்ள அவர், மத்திய அரசு இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்