சென்னை: இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அதிகாரத்துவ வட்டாரங்கள் புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
குடிமக்கள் தங்களின் விவரங்களை மின்னிலக்க முறையில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான 15 நாள் தன்விவரப்பதிவு நடைமுறை இவ்வாண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ‘வீடுகளின் பட்டியல் மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு’ மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநிலப் பொதுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்குமுன் கடந்த 2011ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுக் கணக்கெடுப்பு 2021ல் நடத்தப்பட வேண்டியிருந்தது. இருப்பினும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளூர் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கவுள்ள முதன்மைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டதாகத் தமிழ்நாடு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்பாட்டு இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
“கணக்கெடுப்பின் முதற்கட்டம் வெற்றிகரமாகவும் சுமுகமாகவும் இடம்பெறுவதை உறுதிசெய்வதில் இப்பயிற்சித் திட்டம் ஒரு முக்கியமான படிநிலை,” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின்போது துல்லியத்தன்மையை மேம்படுத்தவும், சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், திறம்படத் தரவுகளைச் சேகரிக்கவும் அப்பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

