புதுடெல்லி: மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தின் மிக முக்கியமான விமான நிலையங்களில் மதுரையும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் இயங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது மதுரைக்கான விமானச்சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், மதுரை விமான நிலையத்துக்கு அனைத்துலக விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக திரு ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
இதனிடையே, மதுரையில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்குமான விமானச்சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் திரு மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
“மதுரை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய விமானப் போக்குவரத்துக்கு மதுரை முக்கியமான இடம் என்பதால் மேம்பாட்டு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்,” என்றார் அமைச்சர் ராம்மோகன் நாயுடு.

