தஞ்சாவூர்: “விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லில், அரவையின்போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதன் விளைவே ஏராளமான நெல் மூட்டைகள் தேங்கிவிட்டன,” என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே’ செறிவூட்டல் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) வரையறை செய்துள்ளது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி நெல் சேமிப்புக் கிடங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புதன்கிழமை காலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், “இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் தமிழகத்தில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகளிடம் இருந்து இதுவரை 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லில் அரிசி அரவையின்போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு மனுமதி அளிப்பதில் ஏற்பட்ட சுணக்கத்தால் அதிகமான நெல் மூட்டைகள் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்றன,” என்றார்.
டெல்லியில் உள்ள நெல் தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலக்க முடியும்.
ஆனால், இதுவரையிலும் மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி கிடைக்கப்பெறவில்லை. அனுமதி வந்த பிறகு செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு விடும்.
தொடர்புடைய செய்திகள்
எனவே நெல் மூட்டைகள் தேங்கின. இதற்கு மத்திய அரசுதான் காரணம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார்,” என்றார் அமைச்சர் சக்கரபாணி.

