சென்னை: தமிழகம் முழுவதும் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சங்கிலிப் பறிப்பு நடந்த 13,000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 17,000 சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.
சங்கிலிப் பறிப்பு, வழிப்பறிகளின்போது கொள்ளையர்களால் பெண்கள் சாலைகளில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால் பல பெண்கள் காயமடைகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள், ஒரு மணி நேரத்துக்குள் ஆறு பெண்களிடம் இருந்து 22 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்தனர்.
இது தொடர்பாக ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, சங்கிலிப் பறிப்புச் சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“ஏற்கெனவே சங்கிலிப் பறிப்பு நடந்த 4,000 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 13,000 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
“மேலும், சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்கள் எளிதில் தப்பிச் செல்லக்கூடிய இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்வர். அப்படிப்பட்ட இடங்களைக் கண்டறிந்து வாகனச் சோதனை, தடுப்புகள் அமைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
73 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்
இதனிடையே, சென்னையில் ஒரே நாளில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாகச் சென்னையில் சங்கிலிப் பறிப்பு, பாலியல் தொல்லை, திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிக அளவில் அரங்கேறி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, இன்னும் ஓர் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதாலும் சென்னைக் காவல்துறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒரே நாளில் சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.