தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி, கலைகளுக்கு ஆதரவும் ஊக்குவிப்பும் தந்தவர்

மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும் தலைவர்: எம்ஜிஆர் நினைவு நாளில் தலைவர்கள் நினைவுகூரல்

2 mins read
a0edd8b7-2d8b-4b66-99da-574eb63de3b5
நடிகராகவும் நாட்டின் முதல்வராகவும் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். - கோப்புப் படம்: இணையம்
multi-img1 of 2

சென்னை: தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற நடிகருமான எம்ஜிஆரின் 37வது நினைவு நாள் தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நினைவுகூரப்பட்டது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், “குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம்.” என்று எடப்பாடி முன்மொழிய அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட எம்ஜிஆர் புகழை யாரும் மறைக்க முடியாது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது,” என்று கூறினார்.

“அவர் சாதி, சமய வேறுபாடுகளைப் பார்த்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தார். அதனால் அனைவரும் போற்றும் தலைவராக வாழ்ந்தார்.

“பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை. எம்.ஜி.ஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்,” என்று ஜெயக்குமார் பேசினார்.

எம்ஜிஆரின் நினைவுநாளையொட்டி, ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என்றும், அவரது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

“ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாசாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார்,” என்று அவர் கூறியிருந்தார்.

பெரியார் மறைந்த டிசம்பர் 24 ஆம் தேதிதான் எம்ஜிஆரும் மறைந்தார். இப்போது இருவரும் ஒரே நாளில் நினைவுகூரப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றிவைத்து தமிழ் மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவும் ஊக்கமும் தந்தவர் எம்ஜிஆர்.

பெரியார் நூற்றாண்டு விழாவின்போது, பெரியார் சீர்திருத்த எழுத்துகளை நடைமுறைப்படுத்தியதுடன் பள்ளிப் பாட நூல்களிலும் மாற்றினார். இன்றைக்குக் கணினிப் பயன்பாட்டுக்கும் மிகப் பொருத்தமானதாக உலகளாவியதாக மாறிவிட்ட எழுத்துகள் அவரால் நடைமுறைக்கு வந்தவை.

தமிழுக்கெனத் தனியே தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்ததுடன் ராஜராஜன் பெயரில் விருதும் அறிவித்தார். மகளிருக்காக கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

மதிய உணவுத் திட்டமும் ஏழைகளுக்கான பல இலவசத் திட்டங்களும் அவரது ஆட்சியின் தனிச்சிறப்பான அம்சங்கள்.

தமிழுக்கும் தமிழினத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் அவரால் முடிந்தவரை பாடுபட்டார்.

இதுபோல எம்ஜிஆரின் சாதனைகளாக எத்தனை வேண்டுமானாலும் பட்டியலிடலாம்.

குறிப்புச் சொற்கள்