தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் செய்த அதிரடி மாற்றம்: ஒரே நாளில் 2153 காவலர்கள் பணியிட மாற்றம்

2 mins read
f5f07f3c-9c60-44d0-949d-f3a84216a3a5
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், கலந்துகொள்ளும் காவலர்கள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும் மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் வேண்டுமென மனு அளித்தனர்.

இதேபோல், டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் போதும் காவலர்கள் பலர் மனு அளித்தனர்.

இந்நிலையில், டிஜிபியிடம் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதில் காவல்துறையின் சிறப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், நிர்வாக ரீதியாக ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், புகாரில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள், விளையாட்டுப் போட்டிகளுக்காக பணிபுரிபவர்கள் ஆகியோர் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இருந்தால் அவர்களை ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்க வேண்டாம்.

அவர்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட மற்றும் மாநகர காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மற்ற அனைவரும் உடனடியாக ஏற்கெனவே பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு, புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் சங்கர் ஜிவால் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், ஓரிரு நாட்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்