பங்ளாதேஷ் நாட்டவரை நாடுகடத்தும் நடைமுறையில் மாற்றம்

1 mins read
0bc4c7f1-ac91-4845-bd01-4043109ea0d2
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டிகேடி மில் பகுதியில் முறைகேடாகத் தங்கியிருந்த 26 பங்ளாதேஷ் நாட்டவர்களைத் தமிழகக் காவல்துறை கைதுசெய்தது. - படம்: புதிய தலைமுறை

திருப்பூர்: தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் பங்ளாதேஷ் நாட்டவர்களை நாடுகடத்தும் நடைமுறையில் சற்று மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வடமாநிலத்தவர் என்ற போர்வையில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் சிலர் ஜவுளித்துறையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் 200 பேரைத் திருப்பூர் வட்டாரத்தில் மட்டும் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைதானவர்களை நாடு கடத்தும் பணியை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகப் புதிய நடைமுறை ஒன்றை அதிகாரிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதும் சிறையில் அடைக்காமல் முகாம்களில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் பங்ளாதேஷ் நாட்டவரின் தண்டனைக் காலம் முடிந்தபின், நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாகத் தெரிவித்தது.

மேலும், இந்திய உள்துறை அமைச்சு கடந்த ஆண்டிறுதியில் வெளியிட்ட உத்தரவின்படி, கைது செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பங்ளாதேஷியரை ரயில் வாயிலாக மேற்குவங்கம் அழைத்துசென்று அம்மாநிலத்தில் இருக்கும் பங்ளாதேஷ் எல்லை வழியாக அந்நாட்டுக்கு அவர்களை அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்த அனைத்து பணிகளும் 30 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் அமைச்சு குறிப்பிட்டிருந்ததாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்