மாறிவரும் திருமண முறை: பிரிந்து வாழ விரும்பும் இளம் தம்பதியர்

5 mins read
0d4426b5-cf0f-44af-ba9c-42f73d480f13
திருமணப் பந்தத்தை அலட்சியப்படுத்தும் போக்கு இளைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 3

விவாகரத்து என்ற ஒற்றைச் சொல்லால் இன்று ஏராளமான குடும்பங்கள் தள்ளாடுகின்றன. உலகம் முழுவதும் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இந்தியாவில் முன்பெல்லாம் விவாகரத்து என்பது மிக அரிதாக இருந்தது. உதாரணமாக, 1980ஆம் ஆண்டு விவாகரத்து விகிதம் 5% ஆக இருந்தது. இப்போதோ, 100க்கு சுமார் 15% தம்பதியர் விவாகரத்தை நாடி குடும்பநல நீதிமன்றம் செல்கிறார்கள்.

இந்திய அளவில் விவாகரத்தை நாடுவோரில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து சம்பந்தப்பட்ட 33,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் ஏறக்குறை 17,000 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டவை. 35 வயதுக்குட்பட்டவர்களே விவாகரத்து வழக்கை அதிகம் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2014ஆம் ஆண்டு 2,000க்கும் குறைவான விவாகரத்து வழக்குகள் தாக்கல் ஆகின. ஆனால், 2024ல் 5,500க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.

விவாகரத்து கோருவதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

என்னென்ன காரணங்கள்?

விவாகரத்து பெற மூன்று முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

1. கூட்டுக்குடும்பம் உடைந்து இளம் தம்பதியர் தனிக்குடித்தனம் செல்வது.

2. ஈகோ பிரச்சினை.

3. வாழும் பிள்ளையை தாய் கெடுத்தல் - அதாவது, முதல் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வரும் மகளை, தாயார் திரும்ப அனுப்பாமல், மகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து, சமைத்துப் போட்டு ராணிபோல் பார்த்துக் கொள்வது.

திரை நட்சத்திர ஈர்ப்பு

நட்சத்திரத் தம்பதிகள் தங்கள் பல்லாண்டு வாழ்க்கையைத் திடீரென முறித்துக்கொண்டு தனித்து வாழ்வது சாதாரணமானவர்களையும் சட்டென ஈர்க்கிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழ்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி பிரிந்து வாழ்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து 30 ஆண்டு கால பந்தத்தை விட்டு விலகி இருக்கிறார் சாயிரா பானு. இயக்குநர் சீனுராமசாமி, 17 வருட திருமண பந்தத்தில் இருந்து மனைவி தர்ஷணாவைப் பிரிந்திருக்கிறார்.

இப்படியான பிரபலங்கள் பிரிந்து வாழ்வது, மற்றவர்களை ஊக்கப்படுத்துவதாகவே உள்ளது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

அதிகரிக்கும் வழக்குகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல நீதிமன்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல நீதிமன்றங்களில் 2024ஆம் ஆண்டு வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாகச் சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17,638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.

மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19,240 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் மும்மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

இளம்தலைமுறை அலட்சியம்

இந்நிலையில், திருமணப் பந்தத்தை அலட்சியப்படுத்தும் போக்கு இளைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது.

‘லிவிங் டுகெதர்’ எனும் திருமண முறை இப்போது தமிழகத்திலும் ஊடுருவி உள்ளது. சேர்ந்து வாழ்வது, பிடிக்கவில்லை என்றால் சுமுகமாகப் பிரிந்துவிடுவது.

இந்த முறையில் உடல் ரீதியான தொடர்பும் வைத்துக்கொள்ளலாம்.

இதன் அடுத்தகட்டமாக, ‘ஃப்ரெண்ட்ஷிப் மேரேஜ்’ எனப்படும் நட்புத் திருமணம் பிரபலமாகி வருகிறது.

நட்புத் திருமணம்

மனதுக்குப் பிடித்த ஓர் இளையரும் இளம் பெண்ணும் சேர்ந்து வாழலாம். ஆனால், இருவரும் ஒரே வீட்டில் தங்கினாலும் உடல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

அதேசமயம் இருவரும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் வெளித்தொடர்பு வைத்துக்கொள்ளலாம்.

நட்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் குழந்தை பெற விரும்பினால், செயற்கை கருத்தரிப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திருமணம் ஜப்பானில் மிகப் பிரபலம். இந்த நட்புத் திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் உண்டு. பிடிக்காதபோது இருவரும் சுமுகமாக பிரிந்துகொள்ளலாம்.

தூக்கமும் விவாகரத்தும்

இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது ‘ஸ்லீப் டைவர்ஸ்’ (SLEEP DIVORCE) எனப்படும் தூக்கம் தொடர்பான விவாகரத்து.

கணவனின் குறட்டைச் சத்தத்தைப் பொறுக்கமுடியாமல் பல வீடுகளில் மனஸ்தாபம் நிலவி வரும் நிலையில், இந்த தூக்க விவாகரத்து என்பது இந்தியாவில் தீயாய்ப் பரவி வருகிறது.

வேலைச்சூழல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இன்றைய இளம் தம்பதியர் மன அழுத்தத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள். அதனால் தம்பதிகள் தனித்தனியே படுக்க விரும்புகிறார்கள். இதனால் நிம்மதியான உறக்கம் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

“காலங்காலமாக கணவன், மனைவி ஒரே படுக்கை அறையில், ஒரே படுக்கையில் படுத்துறங்குகிறார்கள். இது உளவியல் ரீதியாக நல்ல மனநிலையை உண்டாக்குவதுடன், தாம்பத்திய பந்தத்திலும் உறுதியையும் மனநிறைவையும் தருகிறது.

“ஆனால், இப்போது தம்பதியர் விரும்பும் தனிப்படுக்கை, நேரடி பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தாவிட்டாலும்கூட, காலப்போக்கில் மனச்சிக்கலை உண்டாக்கும்,” என்கிறார்கள் உளவியல் மனோதத்துவ நிபுணர்கள்.

ஆனால், பிரிந்து படுப்பது நல்ல உறக்கத்தைத் தருகிறது என்கிறார்கள் தூக்கம் தொடர்பான விவாகரத்து தம்பதிகள்.

இந்தத் தூக்க விவாகரத்து அமெரிக்கா, இங்கிலாந்தைவிட இந்தியாவில்தான் அதிகரித்திருப்பதாக, ‘குளோபல் ஸ்லீப் சர்வே’ (global sleep survey) தெரிவிக்கிறது.

இதன் கூற்றுப்படி, இந்தியாவில் 50% தம்பதிகளும், இங்கிலாந்தில் 50% தம்பதிகளும் தூக்க விவாகரத்து எனும் தனிப்படுக்கையை விரும்புகிறார்கள்.

இந்தியாவில் முக்கியப் பெருநகரங்களில் வசிக்கும் 70% தம்பதிகள் தூக்க விவாகரத்தை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.

குறைந்துபோன பாலியல் ஆர்வம்

தனிப்படுக்கை, நட்புத் திருமணம் உள்ளிட்டவை பெருகக் காரணம், பொதுவாக, இளைய தலைமுறையிடம் பாலியல் ஆர்வம் குறைந்திருப்பதுதான்.

முன்பெல்லாம் தம்பதிகளுக்குப் பொழுதுபோக்கு என்பது பாலியல் உறவு மட்டுமே என்கிற நிலைமை இருந்தது.

இன்றோ, எத்தனையோ பொழுதுபோக்கு, கை நிறைய சம்பளம் என இருப்பதால் பாலியல் ஆர்வம் குறைந்துள்ளது.

கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு, அதன் உப்புச் சுவைக்கு இளைய தலைமுறை அடிமையாகி இருக்கிறது.

அதுமட்டுமன்றி, உணவுத் தயாரிப்பில், உணவு சார்ந்த பார்சல் உள்ளிட்ட விஷயங்களில், உணவைச் சேமிக்கும் பெட்டிகள் ஆகியவற்றில் நெகிழி பயன்பாடு அதிகரித்தபடியே வருகிறது.

இதனால் பல்வேறு உடல் கோளாறுகளுடன் குழந்தைப்பேறும் குறைந்துவிடுகிறது.

இதன் விளைவாகவே தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் செயற்கை குழந்தை கருத்தரிப்பு மருத்துவமனைகளைக் காண முடிகிறது. ஆண்டுதோறும் இம்மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.

இதனால் குழந்தை இல்லை என்ற ஏக்கம் குறைந்தாலும், தம்பதியரிடையே இருக்க வேண்டிய மனரீதியிலான ஒருவித நெருக்கம் மறைந்துவிடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னம் போல் எண்ணம் என சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதை மனத்திற்கொண்டால் இன்றைய இளம் தலைமுறை, பல சிக்கல்களைத் தவிர்த்து வாழலாம்.

குறிப்பாக விவாகரத்தை தவிர்க்கலாம் என்பதே இந்நிபுணர்களின் முதன்மை அறிவுறுத்தலாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்